message box

Sunday, May 22, 2011

அண்மையில், உறவினர் இல்ல விசேஷத்திற்கு வெளியூர் சென்றுவிட்டு, நாகர்கோவிலுக்கு பஸ்சில் பயணித்தேன். கையில் சென்னையில் உள்ள, பிரபல ஜவுளிக்கடை ஒன்றின், கேரி பேக்கில் பழங்கள் வைத்திருந்தேன். அப்போது, "நாகர்கோவில் நகருக்குள் பிளாஸ்டிக் கவரை உபயோகிக்க கூடாது; மீறினால், கேரி பேக் நிறுவனமும், கையில் வைத்திருக்கும் நபரும், "ஸ்பாட் பைன்' கட்ட வேண்டும்...' என்று, பக்கத்து இருக்கை நபர் கூறிய செய்தி, என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் கூறிய பிளாஸ்டிக் எதிர்ப்பை, அந்த மாவட்டம் முழுவதும் காண முடிந்தது. பொது இடங்களில் புகை பிடித்தால், தண்டனை வழங்கும் முறை, இன்று வரை பேப்பர் அளவில் தான் உள்ளது. ஆனால், பிளாஸ்டிக் ஒழிப்பு, பொது மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ, பூமியை ஒழிக்கும் பிளாஸ்டிக் ஒழிந்தால் சரி. "பிளாஸ்டிக்கை ஒழிப்போம்; பூமியை காப்போம்!' என்று அச்சடித்த நோட்டீஸ், அங்குள்ள சின்ன, பெரிய கடைகளில் ஒட்டி வைத்திருப்பது நல்ல பலன், மற்றும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நகரங்களிலும், "பிளாஸ்டிக் ஒழிப்பு' முறையை பின்பற்றலாமே!


நமக்கு நாமே...

வாகன ஓட்டுனரான நான், ஒரு தடவை, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றேன். அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில், பயணிகளை இறக்கிவிட்ட பின், ஓட்டுனர் தங்குமிடத்தில் தங்கினேன். காலைக்கடன் கழிக்க, அங்குள்ள கழிவறைக்கு சென்ற போது, அந்த கழி வறையை தேய்த்து கழுவும் சப்தம் கேட்டு, வெளியில் நின்றேன். சிறிது நேரம் சென்றதும், வெளியே வந்த வரைப் பார்த்து, அச்சரியமடைந்தேன். நின்றேன். காரணம், அவர் கழிப்பறை சுத்தம் செய்யும் தொழிலாளி அல்ல; என்னைப் போல் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்த ஓட்டுனர்.

நான் அவரிடம், "நீங்க ஏன் இதை கழுவுறீங்க?' என்று கேட்டேன். அதற்கு அவர், "தம்பி... நான், இங்கு ஐந்து நாட்கள் தங்க வேண்டும். அதுவரை, இந்த கழிப்பறையைத் தான் உபயோகிக்க வேண்டும். நம் வீட்டு கழிப்பறை அசுத்தமாக இருந்தால், நாம் சுத்தம் செய்யாமல் இருப்போமா? "நான் செய்தது மற்றவர்களுக்காக அல்ல; எனக்காக. நாம் உபயோகிக்கும் எல்லாப் பொருளையும், சுத்தமாக வைத்துக் கொள்வது நம் கடமை. அதனால் தான்...' என்றார்.

இப்போது, எங்கு சென்று தங்கினாலும், நான், இதை பின்பற்றுகிறேன்; மற்றவர்களிடமும் இதைப் பற்றி கூறுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். இதைப் படிக்கும் ஒவ்வொருவரும், சுத்தத்துக்கும், சுகா தாரத்திற்கும் முக்கியத்துவம் தருவர் என நம்புகிறேன்.

கல்யாணத்தில் - பரிசு கலகலப்பு!

அண்மையில் நடந்த திருமண விழா ஒன்றில், வந்தவர்களை ஊக்குவிக்கும் சுவையான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திருமணம் முடிந்ததும், திருமண வாழ்த்து அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது; அதில், அதிர்ஷ்ட எண் குறிக்கப் பட்டிருந்தது. தொடர்ந்து, அதிலிருந்து குலுக்கல் முறையில், சில எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மணமக்கள் கையால் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சிறப்பு அம்சம் என்னவென்றால், சமையல்காரர் ஒருவருக்கும், புகைப்படக்காரர் ஒருவருக்கும் பரிசுகள் கிடைத்தன. இந்த புதுமை நிகழ்ச்சி மூலம், திருமணத்துக்கு வந்தவர்கள் வயிறும், மனமும் நிறைந்தது. இது போல், நம் வீட்டு திருமணத்திலும் புதுமை புகுத்தலாமே!